Friday, November 20, 2015

அமெரிக்காவிலே ஒரு தொடர்ச்சி....

அமெரிக்காவிலே ஒரு தொடர்ச்சி....

முதலில் இந்த கதையை 

ஆகவே... ஒரு கதை பிறக்கிறது!

படித்து விட்டு,

என்னுடைய இந்த போஸ்டையும்

அமெரிக்காவிலே


ஒரு முறை வாசியுங்கள்....

அப்புறம் கதை பிடிபடும்...

ஆகவே... ஒரு கதை மீண்டும் பிறக்கிறது!*****

ராம்கி கன்சல்டன்சி எம்.டி ஆபிஸ்....

"மிஸ்டர் ஸ்ரீநிவாஸ் - ஹவ் வாஸ் யுவர் ட்ரிப்.  சென்னை தானே நீங்க... உடைந்த தெலுகு கலந்த தமிழ் வாடை...  " ராமகிருஷ்ணா ரெட்டி தான்

அப்பொழுது தான் தலை சுற்றிய என் உடல், ஒரு தண்ணீர் பாட்டிலின் உதவியோடு சிறிது சாந்தமடைந்திருந்தது....  எப்படி பேசி எப்படி இனி என் அமெரிக்க வாழ்வை கொஞ்சம் காலம் ஓட்டுவது?

இப்போது இருந்த என் லூக்கிற்கும் சென்னையில் நான் அவரை சந்தித்த பொது இருந்த லூக்கிற்கும் சம்பந்தமில்லை.... வழுக்கை, ஒரு குறுந்தாடி என்று நரையோடு உருவமே மாறிப்போயிருந்தது...

அந்த பரந்த மேசைக்கு பின் இருந்த ஷ்விவல் சேரில் அமர்ந்தவர்... என்னைபபார்த்ததும், ஒரு கணம் உற்று பார்த்து.... திடுக்கிட்டவராக... "ஹா... சிஸ்கோ ரவுட்டர் ஆர்கிடேக்ட் என்ற போதே நினைச்சேன், நீங்களாக இருக்கலாம் என்று.... ஹவ் ஆர் யு... மை தேவுடா.... எனக்கு வேலை கொடுத்தவரே... "

ஒரு நிமிடம் மவுனம்... எனக்கு வார்த்தை வரவில்லை....

 "நீங்க எப்படி.... " எனக்கு வார்த்தைகள் வரவில்லை.. மனதெல்லாம், என் வேலை அம்போ தான், இந்தியாவிற்கு கர்வாப்சி என்று தான் நினைத்தேன்...

இருவரும் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

ரெட்டி தான் கொஞ்சம் அதிகம் டென்சன்னானது போல இருந்தார்.... "எனக்கு ஒரு மணிக்கு ஒரு கிளையன்ட் மீட்டிங்... எ.டி & டி ஆபிஸ் போகணும்... உங்க எல்.சி. இங்கே மாரிஸ்டவுனுக்கு மாத்தரத்துக்கு தான். உங்களுக்கும் அங்கே தானே புது ப்ராஜக்ட் மீட்டிங் ? "

"ஆமாம் .. " என்றேன். வாயில் கொஞ்சம் கூட சத்தம் வரவில்லை.சிக்கல் தீர்ந்தால் சரி. இன்னும் நாலே முக்கால் வருஷம் ஓட்டினால் போதும், குழந்தைகள் இருவரும் காலேஜ் வந்துவிடுவார்கள், அப்புறம் இந்தியா  கிளம்பிடலாம்.

"சரி நீங்களும் என்னோட கூட வாங்க... என்னோட இந்தியன் ஹோட்டலிலேயே மதியம் லஞ்ச சாப்பிட்டிடுட்டு போகலாம்... " எழுந்தார்.

"நிறைய சொல்ல வேண்டி இருக்கு ...நான் நடந்துகிட்ட விதம், எல்லாம் என் குடும்ப சூழ் நிலையால  தான்... நோ எக்ஸ்கியுசஸ் "

"அமெரிக்கா வந்து இப்போ 20 வருஷம் ஆகப்போகுது! " வெல்லாம் பல். அதே பழைய ரெட்டி.

ரெட்டி கண்களில் ஒரு வித பெருமிதம். சாதித்த சந்தோசம்!

"சரி சரி லேட்டாகுது .... வாங்க சாப்பிட போகலாம்.... " ரெட்டி அழைக்க வெளியே நடந்தோம். வெய்யில் மிதமாக இருந்தது. இன்னும் குளிர் விடவில்லை.  சேன் ஹோசே அளவு இங்கே வெய்யில் வராது. இதமாகத்தான் இருந்தது. கோட்டுக்குள் வியர்த்துக்கொட்டிகொண்டு இருந்தது.

மழை வரும் அறிகுறி இருந்தது.

மக்கள் அந்த எடிசன் மாலில் கொஞ்சம் விரைவாக ஓடிக்கொண்டிருந்தனர்.

வெள்ளி ஆதலால் ஆபிசில் உண்ணாமல் வெளியே ஹோட்டலில் உண்பது வழக்கம்.


*

மணி மதியம் பன்னிரண்டு.

"இது என்னோட காம்ப்ளெக்ஸ். சின்ன லெவல் டவுன் மால். பத்து கடை இருக்கு. என் ஆபிசும், என்னோட  இன்டியன் ரெஸ்டராண்டும் ... "

ரெட்டிக்கு 20 வருடம் கழித்து பார்த்த நண்பனைக்கண்ட சந்தோசம். பகிர்தல் ஆரம்பமானது.

"எல்லாம் சேர்த்து மொத்தம் ஒரு 3  மில்லியன் ஆச்சு. இப்பெல்லாம் இங்கே மார்ட்கேஜ் ரொம்ப கம்மி. வர்ற வாடகை அப்படியே கட்டறேன். கொஞ்சம் அப்படியே ஊரு பக்கம் பிலேந்த்ரோபி.. அப்புறம் நம்ம சொந்த பந்தங்கள் இங்கே வர வைக்க ஹைதராபாத்திலே ஒரு ஆபிஸ்...  நான் படிச்ச அமீர்பெட் கோச்சிங் சென்டர்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு தெரியுமா?

மிக பிரபலமான அந்த இந்தியன் பப்பே ஹோட்டலில் சாப்பிட்டோம்... பணியாளர்கள் எல்லாம் என்னை கவனித்துக்கொண்டது மிகவும் அதிசயமாக இருந்தது. முதலாளியின் நண்பர் அல்லவா?

இடையில் ரெட்டியை பார்க்க வந்தார் ஒரு பெண். அவர்கள் இருவரும் நெருக்கமாக சத்தமில்லாமல் "ஹனி ஹனி ... " என்று பேசியதைக்கேட்க வித்தியாசமாக இருந்தது..குறுகுறுப்புடன் பார்த்தேன்!

"ஸ்ரீநிவாஸ் மீட் லிஸ், மை வைப் பார் 15 இயர்ஸ். லிஸ் திஸ் ஜென்டில்மேன் கேவ் மீ மை பர்ஸ்ட் ஜாப்.. "  லிஸ் முகத்தில் மிகப்பெரிய புன்சிரிப்பு. "நீங்க தானா அது... ஹீ கிப்ஸ் சாட்டிங் அபவுட் யு ஆல்வேஸ் .. " கை குலுக்கினார்!

எனக்கு இதுவும் ஒரு பெரிய ஷாக். இன்னும் எத்தனையோ....

அவர்களுக்கு குழந்தைகள் இன்னும் இல்லை. இந்தியாவில் இருந்து இரு குழந்தைகளை சீக்கிரம் தத்து எடுத்து வளர்க்க முடிவாம்.... சென்னைலே சொல்லியிருக்காங்களாம்...

"யு ஷுட் விசிட் அஸ்  அட் ஹோம் சம் டைம் சூன் ஸ்ரிநிவாஷ் ... " லிஸ் சொல்லிவிட்டு சென்றார். அவர் தான் முழு நேரம் ஹோட்டலை நடத்துகிறாராம். லிஸ் ஒரு சோசியல் சர்வீஸ் பர்சனும் கூட.

நியூ ஜெர்சி செனட்டிற்கு அடுத்த எலக்சனில் ரிபப்ளிக்கன் பார்டி சார்பில் நிற்கிறாராம். பணம் இருந்தால், அடுத்து அரசியல் தானே.... இங்கேயும் இந்தியா போல தான்.

உன்ன மனமில்லை. இருந்தாலும் ரெட்  ஐயில் வந்த களைப்பும், காலையில் ஒரு டோனட் மட்டும் சாப்பிட்ட வயிறு கட முட என்றது. சாப்பிட்ட்டு  தான் ஆகணும்... 3 மாதங்களா சொந்த குக்கிங், அப்பப்போ இந்தியன் ரெஸ்டரான்ட் என்று தான் இருந்தது.

நிறைவான அந்த மதிய உணவிற்கு பிறகு ....

"வாங்க கிளம்பலாம்... " ரெட்டி தன் சொகுசு காருக்கு அழைத்து சென்றார்.

12:30 என்று அந்த அமர்களமான லிங்கன் டவுன் காரில் டயல் சொன்னது. அமர்ந்து செல்லவே என் மனதிற்கு ஒரு வித்தியாசமாக இருந்தது. ரெட்டி நிஜமா சூப்பாரா வாழறார்! 

*

எடிசனிலிருந்து மாரிஸ்டவுன் செல்ல குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆகும். முழு கதையும் கேட்டுவிட வேண்டியதுதான் என்று மனதில் நினைத்தேன்.

"நிறைய சோகம் நிறைஞ்ச வாழ்க்க என்னுது... படிப்பு மட்டுமே கை கொடுத்தது... " ரெட்டி கண்களில் நீர்.

"ஆந்திராவிலே, எனக்கு ஒரு அண்ணன். கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாதவன். அப்பா நிலத்தை விற்று தான் படிக்கவே வைத்தார். தனியார் காலேஜுக்கு பீஸ் ரொம்ப ஜாஸ்தி. வெறி பிடிச்சு படிச்சேன்.... " ரெட்டி சொல்ல ஆரம்பித்தார்.

இன்டர்வியு ஞாபகம் வந்தது. நோ டவுட்ஸ்.

"உங்க கம்பெனியிலே எனக்கு ஜாப் கிடைச்சப்ப, நான் சென்னையிலே பட்ட கடனை அடைக்க பல பேரிடம் கடன் வாங்கினேன். சாப்ட்வேரில் இருந்ததாலே ஒரு நல்ல வேலையில் இருக்கிற பொண்ணு கிடைச்சா ரொம்ப நல்லதுன்னு நினைச்சு, நிறைய பொண்ணுங்களுக்கு செலவு பண்ணினேன்...  கடன் ஜாஸ்தி ஆகிடுச்சு... என் வீட்டுக்கு மாசா மாசம் பணம் வேற அனுப்ப வேண்டி இருந்தது...

" ஆஸ்திரேலியா போன சமயம்... அண்ணனுக்கு ரொம்ப சீரியஸ். ஒரு ப்ரெயின் டியுமர் ஆபரேசன். ரெண்டு லட்சம் செலவு. அதனாலே, காசுக்கு அப்படி ஒரு நாடகம்... 5000 ஆஸ்ட்ரேலியன் டாலர் அப்பவே அனுப்பினேன். ஒரு வருசத்திலே எப்படி அவ்வளவு சம்பாரிச்சிருக்க முடியும்?

"ரொம்ப ரொம்ப சாரிங்க... நான் என்ன தான் செஞ்சிருக்க முடியும்? உங்களை தான் ஏமாத்துனது எனக்கு கஷ்டமா இருந்துச்சு... என்னாலே கம்பெனிக்கு பெரிய லாஸ்.

"உங்க கம்பெனிலே அமெரிக்க விசா பண்ணியும் என்னை அனுப்பலே... என் சொந்தத்தில் இங்கே இருக்கிற ஒருத்தன புடிச்சேன், ஒரு மார்வாடி கன்சல்டன்ட் டிக்கட் போட்டு கூப்பிட்டான்... இங்கே நெட்வர்கிங்க்லே நல்ல மார்கட்.... அப்போ... எவன் வேணா அப்பாடக்கர் ஆகலாம்... உங்களுக்கு தெரிஞ்சது தானே? முதலிலே இங்கே அஞ்சு வருஷம் இருந்துட்டு நீங்க ஏன் இந்திய அப்போ திரும்பி வந்தீங்கன்னு நானும் கேட்கலே, நீங்களும் சொல்லலே. பேமிலி ரீசன்னு ஞாபகம்...

தலை ஆட்டினேன். நிச்சயமா அப்பாவின் உடல்நிலை காரணம்  தான் இந்தியாவிற்கு என்னை திரும்ப அழைத்தது. அண்ணனுக்கும் வெளிநாட்டில் வேலை அப்போது, திரும்பி வரமுடியாத விசா பிரச்சனை. இன்டியாவிலேயே சம்பளமும் நிறைய கொடுக்க கம்பெனிகள் ஆரம்பித்திருந்தனர்.

"மே 1996 இங்கே லேண்ட் பண்ணினேன்.... சொந்தக்காரன் இருந்ததாலே பரவாயில்லே, அவன் மூலமாவே ஒரு ப்ரோஜக்டில் செட்டில் ஆனேன். அவன் கூடவே தங்கினேன். 

"முதலிலே கிடைச்ச வேலைலே ஒரு வருஷத்துலே, மிச்சம் ஒன்னும் பண்ண முடியலே... அப்பாவும் அடமானம் வச்ச வீட்டை திருப்ப பணம் பத்து லட்சம் வேணுமா இருந்துச்சு... ஒரு வருசத்துலே யார் அப்படி மிச்சம் பண்ண முடியும்?

"நிறைய பேர் உதவி செஞ்சாங்க... அவங்ககிட்ட நிறைய கடன் பட்டேன்...சரியான நேரத்துலே கடன் திருப்பி கட்டமுடியலே...  நிறைய பேர் என்னாலே ஏமாந்தாங்க, என் முகராஷி அப்படி...

"வேற கம்பெனி வேலை புடிச்சேன்... சொந்தக்காரன், நான் வேலை மாத்துறது பத்தி யார் கிட்டயும் சொல்லலே. ஒரு வருசத்துலே டபுள் சம்பளத்துக்கு பெரிய கம்பெனிலே வேலை. இந்தியா போக மார்வாடி கொடுத்த ரிடர்ன் டிக்கட் இருந்துச்சு. மே 97 கிளம்பிட்டேன். ஊரில் கடன் அடைச்சேன். திரும்பி இங்கே வந்தேன்.

"ஒரு மாசத்தில் அவர்களே என்னை கண்டுபிடிச்சு வந்தாங்க. கடன் எல்லாம் தீர்த்தேன். இங்கே சொந்தாகாரனுக்கே கடன் ஒரு வருஷம் கழிச்சு அடைச்சேன்.

"எனக்கு எல்லாமே பிற்பாடு தேவுடா ஒன்னு ஒண்ணா கொடுத்தான்.

"2001 லே தான் ராம்கி கன்சல்டன்சி ஆரம்பிச்சேன். மொத்த பில்லிங்கும் என் கையிலே. கொஞ்சம் கொஞ்சமா ஊர் பக்கம் சொந்தங்களை இங்கே வர வச்சேன். இப்போ இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்.

கொஞ்ச நேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கார்டன் ஸ்டேட் பார்க்வே சத்தம் மட்டுமே இருந்தது.

மாரிஸ் டவுன் வந்தடைந்தோம். நானும் ரெட்டியும் அவரவர் வேலை முடிந்துவிட்டு வந்தோம்.

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு என்னை ஹோட்டலில் டிராப் செய்ய வெளியே ரெட்டி நின்றுக்கொண்டிருந்தார். திரும்பவும் அவர் கூடவே பயணம். அடுத்த நாள் மதியம் தான் ப்ளைட்.

என் மனதை ஏதோ பண்ணியிருந்தார் அந்த மதியம்....


*

ஹோட்டல் வருவதற்கு முன்....

அப்புறம் லிஸ் எப்படி? என்னால் இந்த கேள்வி மட்டும் தான் கேட்க முடிந்தது..

ரெட்டி சொன்னது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது...

"லிஸ் என்னை ஒரு யோகா கிளாசில் சந்திச்சார்... அப்படியே பழக்கம்... கல்யாணம் வரை போயிற்று...  ஷி வாஸ் எ விடோ. என்னை விட பத்து வயசு பெரியவங்க...

"2001 ட்வின் டவர் 911 சமயத்துலே... வேலை போயிருச்சு. க்ரீன் கார்ட் நிப்பாட்டிடான். என்ன பண்றது, க்ரீன் கார்டுக்காக கல்யாணம் இங்கேயே பண்ண வேண்டியதாப்போச்சு.

பிறகு ஹோட்டல் வரும் வரை நீண்ட மவுனம்.

"ஸ்ரீநிவாஸ் - உங்களை வாழ்க்கையில் எப்பவும் மறக்க மாட்டேன். நிச்சயம் இங்கே செட்டில் ஆக உதவி பண்றேன். தயங்காம கேளுங்க. சென்னைக்கு ஒரு முறை போகணும், பழைய கடன்களை அடைக்கணும்...

"இப்பெல்லாம் இங்கே ரொம்ப கஷ்டம். யாரும் இந்தியா ஆளுங்களுக்கு வேலை கொடுக்கிறது இல்லே. அதுவும் ஒரு இந்தியன் இன்னொருத்தனுக்கு... சான்சே இல்லே..

"நான் உங்களை மறக்கமாட்டேன். சி யு. வீ வில் மீட் சம் அதர் டைம்.

இறங்கிக்கொண்டேன்.

ரெட்டி கை அசைத்துவிட்டு, காரில் நகர்ந்தார்....

 ஏனோ நெடு நாளாக இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது!

***


No comments: