Tuesday, June 28, 2016

சிறுகதை : லதா

ஜூலை 23.....

இன்று லதாவிற்கு கல்யாணம். என் அருமை காதலி அவள்.

என்னோடு ப்ளஸ் 2 படித்தவள். இருபத்தொன்பது வயதாகிறது!


காலையில் அவளிடமிருந்து ஒரு மிஸ்ட் கால்.


*

பதினைந்து வருடம் பழக்கம். ஒரே பள்ளி. இருவரும் ஒன்றாக தான் பள்ளி செல்வோம். நாங்கள் இருந்த நல்லூருக்கு அருகில் இருந்த தனியார் பள்ளியில் தான் ஏசுவை வணங்கிக்கொண்டு படித்தோம்.

அவள் கொண்டு வரும் புளிக்காயச்சலும் தயிர் சாதமும், இன்னும் நாக்கில் ஊருகிறது. அம்மா செய்யும் பருப்பு துவையல் அவளுக்கு இஷ்டம்.

அவள் அப்பா ஒரு ப்ரோகிதர். பாவப்பட்ட குடும்பம் என சொல்லும் வீடு. எங்கள் தெரு அருகில் தான்... ஒட்டு உடைசல். புளியோதரை மனம். தேங்காய் வாசம்... என்னை அம்பி என்று அழைப்பார்கள். அவள் அம்மாவிற்கு தெரியும், என் காதல். விதி?

நன்றாக ஸ்லோகம் சொல்லுவாள். நிறைய மந்திரங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தாள் !  காயத்ரி மந்திரம்... இப்போ மன நிம்மதிக்கு உகந்த மந்திரம்.

என்னோடு நன்கு பழகியவள்.... மனதோடு ஒன்றியவள்...  இருவருக்கும் தெரிந்த அவரவருக்கு ஒரு தலை காதல்!

நன்றாக படித்தாள் ... பி.ஏ. ஆங்கிலத்தில் கோல்டு மெடல். நான் எப்படியோ தாக்கி தடுமாறி ஐ.டி. ... பிரைவேட் காலெஜ், சென்னையில் ட்ரெயினிங் வேலை என்று இப்போது பெங்களூரில் வந்து நிறுத்தியுள்ளது. ஏழு வருடமாக வெளிநாடு போக ஆசை தான். இன்னும் விசா வந்தபாடில்லை.

லதாவிற்கு பி.எட் முடித்தவுடன் அரசாங்க பள்ளியில் உத்தியோகம் வந்தது. சில வருடங்களில் பெர்மனென்ட் ஆகுமாம். அப்பப்போ கால்கள் வரும்.

நான் எந்த ஊரில் இருந்தாலும் , வீடு செல்லும் போது அவளை சென்று பார்ப்பேன்...

சென்ற மாதம் கூட அவள் பாடம் நடத்தும் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அவளுக்கு பிடிக்கும் என்று பளு பெல் டர்கிஷ் அல்வா எடுத்து சென்றேன்!

சென்ற மாதம் சென்ற போது கிளம்பும் நாள் தான் பார்த்தேன். அவள் முகம் வாடியிருந்தது... என்னை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.. "அப்பா எனக்கு கல்யாணம் பிக்ஸ் செஞ்சுட்டார்... மாபிள்ளை பிசிக்ஸ் வாத்தியார், பொள்ளாச்சியில். ப்ளஸ் 2  ஸ்டுடண்ட்ஸ், டுசன் வருமானமும் அதிகம்! "...

"டேட் இன்னும் முடிவாகலே.. ஒரு மாசத்திலே இருக்கும்... ஐ.டி. மாப்பிள்ளை இந்த காலத்திலே வேண்டாம்னு எல்லோரும் சொல்லிட்டா.. இதிலேயும் அப்பா  ப்ரோகிதம் பண்றது நின்னுடும், நான் உங்களை கல்யாணம் செஞ்சா... "


முதல் முறையாக காதல் சொல்லப்பட்டது!

அந்த விசும்பல் ஆயிரம் அர்த்தங்கள் சொன்னது.

"உனக்கு வசதி இருக்கு.... எங்கே வேண்டாம்னு, அப்பாவையும் அம்மாவையும் பெங்களூர் அழைச்சுண்டு போவீங்க. ஆனா எங்க வழக்கங்கள், கலாச்சாரம்... சொந்தங்கள்.. எங்கு போய் நிக்கிறது? தம்பி வேறு வளர்ந்துட்டான். அடுத்த வருஷம் ப்ளஸ் 1. அவன் படிப்பு செலவு மாப்பிள்ளை எத்துண்டார்! "

மீண்டும் விசும்பல்....

"நாமோ இனிமே சந்திக்க கூடாது.."

மீண்டும் விசும்பல்...

ஓடிவிட்டாள்.

மல்லிகை மனம் இன்னும் இருந்தது.

மறக்காமல், கையில் நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்..

*

ஒரு வாரம் கழித்து என் மொபைல் சிணுங்கியது... லதா தான்.

"ஜூலை 23 கல்யாணம் முடிவாகியிருக்கு ...  வரும் ஞாயிறு அப்பா ராமேஷ்வரத்திலே. ப்ரோகிதம் பண்ண போறார். பெரிய சாமியாரெல்லாம் வாராலாம்.  நாங்களும் போறோம், மாப்பிள்ளையும் வர்றார். சூரிய கிரகணத்துக்கு அடுத்த நாள். நல்ல நாளாம்... நாங்கோ இருக்குறே லாட்ஜ் அட்ரெஸ் எஸ்.எம்.எஸ் பண்ணிடுறேன்...வரியாடா ஷங்கர்?"

"ஹும்.. பாக்குறேன்.. " என் குரல் கணகணத்தது...

கால் கட்.

*


என்ன தான் எதிர்பார்க்கிறாள்?

அடுத்த மாதம் ஊருக்கு போகும் போது பார்க்கவேண்டும்!

என் முன்னே bharatmatrimony தளம் பறந்து விரிந்து பெண்களின் பெயர்களோடு மிதந்தது!

லதாவை தேட ஆரம்பித்தேன்.