Sunday, April 11, 2010

சம்மர் வெகேசன்

இப்போதெல்லாம், தினமும் இருக்கும் டைம் எல்லாம் மகனையும், மகளையும் சம்மர்  வெகேசன் என்ற வேலை நிறைந்த யுகத்தில் சுழல்கிறேன்.

காலையில் நீச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டும். பிறகு அவர்கள் ஏதாவது பெயிண்டிங் கலரிங் என்று இருப்பார்கள். மாலை மீண்டும்  நீச்சல் அல்லது எங்காவது பார்க் அல்லது சாப்பிங். அடுத்த வருட பாட புத்தகங்கள் இப்போதே கொடுத்து விட்டார்கள். மனைவி முதலில் படித்து, பிறகு சொல்லிக்கொடுக்க வேண்டும். டீச்சர்களை யார் நம்புவது? எல்லா பாடத்திலும் ஏ ப்ளஸ் வாங்க வேண்டுமே. அபார்ட்மெண்டில் குழந்தைகள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகம் வர, மார்க் முக்கியம்! :-)

எங்க ஜெனரேசன்லே கிரிக்கெட் தான். கிட்டிப்புல், கோலிகுண்டு லெவல் குறைவு ( கான்வென்ட் ஸ்கூல் பசங்களுக்கு! )

காலையில் அவசரமாக இரண்டு இட்லி தின்றும் தின்னாமல், கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு, கார்க் பால் வைத்திருக்கும் கணபதியை பிடிக்க ஓடி...நான்கு மணி நேரம் நஞ்சப்பா கிரவுண்டில் விளையாடிய பிறகு ...
செட்டியார் வீட்டில் தண்ணீர் பந்தலில் வயிறு முட்ட நீர் மோர் குடித்து விட்டு, வீட்டில் வந்து ஒரு கவளம் கூட சாப்பிடாமல் அப்படியே கட்டிலில் விழுந்து விடுகிற சனி....

நாற்பது பேர் படித்த கிளாசில், எனக்கு (முதல்) அடுத்த ரேன்க் என்று சொல்லிகொள்ளும் இருபத்தியாறாவது ரேன்க் ...குமார்... ( வாழ்க்கையிலே இப்போ என்னைவிட அவன் பெரிய ரேன்க் ) ... எங்கம்மா கொடுக்கும் நுரை தளும்பும் காப்பி குடிக்க டைம் செய்து வரும் வரை ... தூக்கம்... சொர்கம்.

நண்பர் கே. ஸ்ரீ சரவணன் பேப்பர் கவர் செய்ய சொல்லிக்கொடுத்தான். நூறு கவருக்கு ஐந்து ருபாய். குமுதம் விகடன் சைஸ். பொறி கல்லை கடைக்கு சப்பளை. பதினோரு வயதில் தங்கைகள் உதவியுடன் ( அம்மா மாவு பசை செய்து கொடுக்க ) ஒரு வாரத்தில் முப்பது ருபாய் ( என் ஒரு மாச ஸ்கூல் பீஸ் ) சாம்பாரிதது இன்றும் நினைவில் நிற்கிறது.

கோவை பாட்டி வீட்டிற்கு ஒரு வாரம் மட்டும் சென்று வந்தோம், திருப்பூரை விட அங்கு சூடு குறைவு. வேறு சொந்தங்கள் வீடு லீவில் இருக்க செல்லும் வழக்கம் எங்க வட்டாரத்தில் இல்லை.

பிறகு வீட்டில் அட்டை பெட்டி செய்தது, பனியன் தொழில் அப்பாவிற்கு உதவி என்று லீவு நாட்கள் சென்றது. ( ஸ்கூல் / காலேஜ்  செலவிற்கு சம்பாரித்து விடுவேன் )

ஏழாவது படித்த சமயம் எல்.ஐ.சி. சதீஷ் ( அவன் அப்பா அங்கு மேனேஜர் ) வீட்டில் கம்ப்யுடர் பழகியது, கேம் ஆடியது, மெடிடேசன் பழகியது என கழிந்தது.

எட்டாவது படித்த சமயம் (டாக்டர்) ஈஸ்வரமூர்த்தி வீட்டில் கவிதை எழுத பழகியது ... பார்வை என்ற கையெழுத்து பிரதியில் எழுதியது, தனியாக 'தூறல்' என்ற கையெழுத்து பிரதி நடத்தியது ( இன்றும் என் நண்பர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் ) எல்லாம் சம்மர் வேகசன் டைமில் தான்.

No comments: