என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவன் அப்படி செய்வான் என்று!
அவன் மட்டும் கடைசி பந்தில் ஸிக்ஸர் அடிக்காவிட்டால், எங்கள் மானம் காற்றில் போயிருக்கும். எங்க டீம் அப்படியே எங்கேயோ தொலைந்து போயிருக்கும்! ஒன்றும் உருப்பட்டிருக்கமாட்டோம்.
நிற்க. இது என்ன லகான் கதையா! இல்லைங்க. முற்றிலும் புதுமைங்க. ஆனா நடந்து முடிந்த சம்பவத்தில் இதில் தொடர்புடையது.
கதை களம். கிரிக்கெட். ஸிக்ஸர். படிப்பு. சேலஞ். ப்லேஸ் பேக். 1986.
கதையின் நாயகன் சுந்தரவடிவேல் ஒரு கிரிக்கட் வீரன். இல்லை இல்லை. ஒரு வெறியன். அவனோடு சம்பந்தப்பட்டு ஒரு டீம். நன்றாக படிக்கவும் செய்யும்! இல்லையென்றால் எப்படி பர்ஸ்ட் க்ரூப் கிடைக்கும்?
அவர் படித்த திருப்பூர் பள்ளி கொஞ்சம் சுமாரானது என்றாலும், நல்ல கிரௌண்ட் கொண்டது! திறமையானவர்கள், யு.ஆர். ராதாகிருஷ்ணன் போன்றோர் ஆடியது, தமிழ்நாட்டு டீமுக்கு செல்ல வைத்தது! சனி ஞாயிறு இடம் பிடித்து ஆடுவது ஒரு வெரித்தனமான பொழுபோக்கு!
ப்ளஸ் டூ டீம் நாங்கள், பர்ஸ்ட் க்ரூப் வேறு. எஞ்சினீரிங், மெடிகல் என்ட்ரன்ஸ் என தயார் செய்த போதும், கிரிக்கெட் எங்களை வாட்டியது! ஒரு மேட்ச் விடாமல் பார்ப்பது தான் நாங்கள் இந்திய அணிக்கு செய்த கைம்மாறு! கிடைக்கும் வீட்டில், இடத்தில் மேட்ச் பார்ப்போம். அப்பா அம்மா தொந்தரவு வேறு இருக்கக்கூடாதே!
மேட்ச் நடக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை க்ளாசில் கிட்டத்தட்ட ஒருவரும் இருக்கமாடோம். அப்போது ஏதாவது டெஸ்ட் வேறு இருக்கும்!
படிப்பு கெடுகிறது என்ற அக்கறை இல்லாமல், மொத்த கேங்கும் வெறியோடு கிரிக்கெட் பார்ப்பதே தொழிலாக இருந்தது! இந்திய ஜெயித்தால் கிடைக்கும் பாக்கெட் மணி பணத்தில், சரியான ட்ரீட் - ஐயர் கடை கேக். அப்புறம் தொடரும், வீதியில் கிரிக்கெட்!
படிப்பில், வாங்கும் மார்க்கில் க்ளாசில் எல்லோரும் கொஞ்சம் சுமார் தான்... எஞ்சினீரிங் மெரிட் சீட் கிடைக்குமா என்பதே சந்தேகமே. அப்போது மொத்தம் இரண்டாயிரம் கவர்ன்மென்ட் கோட்டா சீட் தான் இருந்தது! அதிலும் எலெக்ட்ரானிக்ஸ் கிடைப்பது குதிரைக்கொம்பு! கம்ப்யுட்டர் எட்டாக்கனி!
க்ளாசில் எங்களை எல்லாம் திட்டி விட்டு தான் மாஸ்டர்கள் எல்லோரும் பாடம் ஆரம்பிப்பார்கள். அதுவும் வெள்ளி லீவு போட்டிருந்தால், திங்கள் சரியான திட்டு தான்! எங்களை கண்டால் கொஞ்சம் கூட பிடிக்காத மேத்ஸ் மாஸ்டர் சந்தரசேகர் சேலஞ் வேறு செய்திருந்தார்! இப்படி கிரிக்கட்டில் அலையும் ஒருவனும் எஞ்சினீரிங், மெடிக்கல் சேர போகப்போவதில்லை என்றார்!
கிரிக்கெட் விளையாடிய பின், எங்கே போய் டுசன் போவது! பாதி விஷயம் க்லாசிலியே புரிந்துவிடும். அப்புறம் இருக்கவே இருக்கு நைட் அவுட் படிப்பு. எப்படியோ ப்ராக்டிக்கல் மார்க் வந்துவிடும், கரையேறி விடலாம் என்ற எண்ணம். பேச்செல்லாம், எப்.சி., பி.சி. கோட்டா, கட் ஆப்...
அவர் அப்படி சொன்னதில் இருந்து எங்க டீமுக்கு ஒரு ரோசம். எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். இந்திய தோற்றால், டிவி பார்ப்பதை விட்டு, கிரிக்கெட் ஆடுவதை அடியோடு நிறுத்திவிட்டு டீம் எல்லோரும் நன்றாக படித்து மாஸ்டர் மூஞ்சியில் கறியை பூசுவது என்று. இல்லாவிட்டாலும், படிப்பது இருக்கும், கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்! அவ்வளவுதான்!
இப்படியாக, எங்கள் டீம் ஆட்கள் மொத்தம் பதினைந்து பேர் - அடித்து பிடித்து, க்வேச்டியன் பேப்பர்களை தேடி, மேத்ஸ் ஸம்ஸ்களை எழுதி எழுதி பார்த்து... தமிழ் மற்றும் இங்கிலிசை பாஸாக மட்டும் படித்து... டைம் போய்க்கொண்டு இருந்தது, கிரிக்கெட் விளையாடுவது நின்றபாடில்லை! மேட்ச் பார்ப்பதும் நிற்கவில்லை. டீமின் மொத்த குடும்பமும் என்ன ஆகபோகிறதோ என்ற கவலையில் தினம், திட்டு குட்டு என்று இருந்தார்கள்.
அன்றைக்கு சார்ஜாவில் பைனல்ஸ். இந்தியாவும் பாகிஸ்தானும் சரியான போட்டி மேட்ச்.
சேடன் சர்மா வீசிய அந்த கடைசி பந்து, ஜாவத் மியன்டாட் அடிக்க, அது சிக்சருக்கு பறந்தது...
இந்தியா தோல்வி.
சுந்தரவடிவேல் என்னை பார்த்து சொன்னான், "டேய் விஜய் பாத்தியாடா, சாமியே நமக்கு வழி காட்டுச்சு! இனி படிப்பு தாண்டா கதி! "
எல்லோரும் ஆமோதித்தோம்!
பிறகு எல்லோரும் பதினைந்து திசைகளில் எஞ்சினீரிங், டாக்டர் என படித்தது நடந்தது...
இன்றும் நண்பர்கள் கூடும் போது, கடைசி பந்து ஸிக்ஸர் பற்றி பேசிக்கொள்வோம்! எப்படி மறக்க முடியும்?
***
உரையாடல் கதை போட்டிக்கு!
உரையாடல் போட்டி
சங்கமம்
1 comment:
Super batting!
Post a Comment