Friday, August 15, 2008

ஆண் - பெண் நட்பு

இரண்டு பேர் சம்பந்தப்பட்ட எதுவுமே சிக்கலான விசயம் தான். அந்த விசயம் "நட்பு" என்றால் அது மேலும் சிக்கலானது. அதிலும், அந்த இருவரில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண் என்றால் சிக்கலுக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லை! Cross-gender friendship என்று சொல்லப்படும் "ஆண் - பெண் நட்பு" விவாதிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு சுவாரசியமான தலைப்பு என்பதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

ஆண்-பெண் நட்பு என்றதும் நம் மனதில் எழும் முதல் கேள்வி - ஒரு ஆணும் பெண்ணும் எந்தவிதமான உடல் கவர்ச்சியும் இல்லாமல் கடைசி வரை நண்பர்களாக இருப்பது சாத்தியமா? என்பது தான்.

நம்ம ஊர் தமிழ் சினிமாக்கள் எல்லாம் "சாத்தியம் இல்லை" என்று தான் இன்றுவரை நிரூபித்திருக்கின்றன. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். 'பாலைவனச் சோலை' படத்தில் சுகாசினிக்கும் நான்கு ஆண்களுக்கும் இடையே ஆழமான நட்பு நிலவும். கடைசியில் அதில் ஒருவர் மேல் காதல் ஏற்படும். 'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் ஷாலினியும் பிரசாந்த்தும் இனை பிரியாத நண்பர்களாக இருப்பார்கள். ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படும் போதுதான் இருவருக்கும் மனதில் காதல் ஒளிந்திருப்பது தெரியவரும். இப்படி பலத் திரைப்படங்கள் உள்ளன. நட்பு என்பது பின்னால் தோன்றும் காதலுக்கான அஸ்திவாரமாகத் தான் திரைப்படங்களில் பிரதிபலிக்கப்படுகிறது. திரைப்படங்கள் மட்டுமன்றி நம் வரலாற்றிலும், இதிகாசத்திலும், இலக்கியத்திலும், ஆண்-பெண் நட்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்-பெண் நட்புக்கு எங்கேயும் எதிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை! ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற சமுதாய எதிர்ப்பார்ப்பு, சமுதாய ஆதரவின்மை மற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடு ஆகியவை யதார்த்தமான நட்பு மலர்வதைத் தடுக்கிறது. நம்ம தமிழ்ச் சமுதாயத்தில் தான் இப்படியென்றால், அமெரிக்காவில் கூட ஒரு ஆண் ஒரு பெண்ணின் நெருங்கியத் தோழனாக இருந்தால், அந்த ஆண் ஒரு "gay" ஆக இருப்பானோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது! சில பெண்களும், gay ஆண்களை நண்பர்களாக இருப்பதை விரும்புகிறார்கள். ஏனென்றால் அது தொல்லை இல்லாத நட்பாம்!

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என் ஆசிரியை, வகுப்பறையில், மாணவன்-மாணவி-மணவன்-மாணவி என்று மாற்றி மாற்றி உட்கார வைத்திருப்பார். ஆஹா! ஆண்-பெண் நட்பை பள்ளிப் பருவத்திலிருந்தே வளர்த்தார்களோ என்று நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டாம். ஆசிரியை அப்படி எங்களை உட்கார வைத்ததற்கு காரணம், அப்பதான் நாங்கள் பக்கதிலிருப்பவர்களிடம் பேசாமல் இருப்போம், வகுப்பில் அமைதி நிலவும் என்பதற்காக! அந்த மாதிரியான பள்ளிச் சூழ்நிலையில் படித்துவிட்டு, நான் பொறி இயல் கல்லூரியில் சேரும்போது, சக மாணவர்களுடன் பேசிப் பழக மிகவும் சங்கோஜப்பட்டேன். அந்த சின்ன வயதில் இம்மாதிரி எண்ணங்களைப் பதித்தார்களென்றால், ஆண்-பெண் நட்புக்கு மாறாக விரிசல் தான் ஏற்படும்.

"Cross-gender" நட்பைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இரு பக்க வாதங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு ஆண்-பெண் நட்பு என்பது சுவாரசியமாகத் தோன்றினாலும், "அது வேறு ஏதோ ஒன்றில் சென்று முடிந்துவிடும்" என்கிற பயமும் இருக்கிறது. எந்தவிதமான சபலங்களும் இல்லாமல் புனிதமான நட்பு மட்டுமே கடைபிடிப்பது மிகவும் கடினம். ஒரு ஆண் தன் தோழியுடனோ, ஒரு பெண் தன் தோழனுடனோ காலார நடக்கையில், சேர்ந்து புத்தகம் படிக்கையில், மணிக்கணக்காக பேசுகையில், உணர்ச்சிகள் எப்படி குறுக்கிடாமல் இருக்க முடியும்? என்கின்றனர் சிலர். அப்படியே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவன் அந்த பெண்ணுக்கும், அதே போன்ற மனைவி அந்த ஆணுக்கும் அமைவதன் சாத்தியக்கூறு குறைவு. இதை எழுதும் போது அறிவுமதியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கவிதை வரிகள் சரியாகத் தெரியவில்லை, ஆனால் கருத்து இதுதான்: ஒரு ஆணும், அவனுடைய தோழியும் வெகு நேரம் மனம் விட்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அந்தப் பெண், "நேரம் ஆகிவிட்டது என் கணவர் காத்திருப்பார்" என்று சொல்லி விடைபெற்றுச் சென்றுவிடுகிறாள். நண்பன் நினைக்கிறான், கணவனிடம் ஒரு பெண் "என் நண்பன் காத்திருக்கிறான், நான் அவனைக் காணச் செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு நண்பனைத் தேடி வரும் காலம் வருமா என்று!

ஆண்-பெண் நட்பைப் பற்றி நம்பிக்கையான கருத்துக்களும் இருக்கின்றன. ஆண்கள், பெண்களின் நட்பை அதிகமாக விரும்புகிறார்கள். "பெண்களிடத்தில் ஆண்களிடம் கிடைக்காத ஒரு மிருதுவான மனதை வருடும் அன்பு கிடைக்கிறது. பெண்களிடம் எங்களுடைய பலத்தையோ, செல்வாக்கையோ நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் பலவீனத்தைக் காட்டினாலும், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆண் - பெண் நட்பை பல விசயங்கள் நிர்ணயிக்கின்றன. வயது ஒரு முக்கிய காரணம். கல்லூரி வயதில் தான் அதிகபட்ச ஆண் - பெண் நட்புகள் மலர்கின்றன. திருமணத்திற்குப் பிறகு இந்த வகை நட்புக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கணவனின் நண்பர்கள் அவளுடைய நண்பர்களாக ஆகிறார்கள். அவளுடைய கல்லூரி கால நண்பர்களுடனான நட்பு அவ்வப்போது தொலைபேசுவதோடு நின்று போய்விடுகிறது. மற்றொரு காரணம் ஒருவர் எந்த அளவு முற்போக்குச் சிந்தனை உடையவராக இருக்கிறார் என்பது. ஆண் - பெண் நட்பு கலாசார எல்லைகளுக்குச் சவால் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

வயது, இனம், மதம், நாடு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றைக் கடந்த நட்பு, ஏன் உணர்ச்சிகளைக் கடக்க முடியாது? முடியும்! அது சாத்தியம்! அப்படி என்ன இந்த வகை நட்பினால் நன்மை? ஒரு ஆண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி பெண்ணிடமிருந்தும், ஒரு பெண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி ஒரு ஆணிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியும். ஒரு ஆணின் சிந்தனைகளையும் ஒரு பெண்ணின் சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய சிந்தனை வட்டம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இதனைப் பாராட்டக்கூடிய சமுதாயமாக நம் சமுதாயம் இருக்கவேண்டும்.

கொஞ்சம் யோசிக்கவும் வைக்கிறது.

சினிமா படங்களில் மட்டுமல்ல.. கதைகளிலும் 'காதல்' என்பதை ஏதோ நட்பின் அடுத்த நிலை என்பது போலத்தான் பார்த்திருக்கிறோம். 'நட்பு காதலாக மலர்ந்தது' என்பதை ரெண்டு சிட்டுக் குருவிகளோ.. இல்லை பூச்செடிகளோ ..ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு.. பலநூறு முறை நமக்கு பாடம் நடத்தியிருக்கின்றன.

உண்மையில் எதார்த்தம் வேறாகவும் இருக்கலாம்.. நடைமுறை வாழ்க்கையில் நட்பு நட்பாகவே தொடருவதையும் நாம் பார்த்திருக்கலாம்.. ஆனால் அது கொஞ்சம் உப்பு சப்பில்லாதது போலிருப்பதால் அதையாரும் கதையாக சினிமாகவாக எடுப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

மற்றபடி நமது ஆசைகளே நமது பயணத்தைத் தீர்மாணிக்கின்றன. சமூகத்தின் பார்வை என்ற சங்கதியும் சிலரை அவர்கள் விரும்பாத பாதையில் திசை திருப்பிவிடுவதுண்டு.

உண்மையில் வார்த்தைகளின் பற்றாக்குறை கூட 'சாதாரண' நட்பிலிருந்து வித்யாசப்படுத்தும் முயற்சியில் இது ஒருவேளை 'காதலோ' என நினைக்கத் தோன்றுகிறது.

நெடுநாள் பழக்கம் அறிமுகப் படுத்தியிருக்கும் சில ஒத்த குணங்கள் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் போது.. அதுவே பிடித்தும் போகும் போது.. இந்த சமுகத்தால் சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் எங்கே இதை தொடர முடியாது போய்விடுமோ என்ற எண்ணங்கள் பயங்கள் கூட நண்பர்கள் சிலரை காதலர்களாக்கக் கண்டதுண்டு.

வரையறைகளையும்.. தெருவில் குரைக்கும் நாய் போன்ற சமுதாய ஏளனங்களையும் பொருட்படுத்தாமல் கண்ணியமாக நட்பைத் தொடரவும் முடியும் தான் என்று தோன்றுகிறது.

நன்றாக விற்பனையாகக்கூடிய விவாதச்சரக்கு இது.

இந்த விவாதம் ஏதோ புரியாத புதிர்போல நீள்வதற்கு அடிப்படை புரிதல் ஒன்றினை நாம் பலரும் கொண்டிருக்காமை தான் காரணம்.

அந்த புரிதலானது,

மனித உறவுகளுக்கு பெயர்வைத்து அழைப்பது, மனித உறவுகளை சட்டங்களுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அடக்கி சமூகச்சட்டங்கள் என்ற செயற்கையான அமைப்பினை உருவாக்கியது,

அந்த புறநிலையான அமைப்பினை நிறுவனமயப்படுத்தி, தொடர்ச்சியாக கருத்தியல் ரீதியான திணிப்பின் மூலம், சமூக உளவியலோடு பின்னிப்பிணைந்ததாக மாற்றியது,

பின்னர் இதனை தனிமனித பொருளாதார, உளவியல் பிரச்சனை ஆக்கியது

எல்லாம் மனிதர் செய்த வேலை.
மனிதக்கண்டுபிடிப்புகள்.
செயற்கையானவை.

ஆண்-பெண் பால் வேறுபாடு புணர்ச்சிக்காகவே உருவானது.

நட்பு, காதல், அம்மா, தங்கை, அண்ணன், சித்தப்பா எல்லாம் வெறும் செயற்கைப்பெயர்கள்.

"மனித உறவுகள் என்பதே " சரியான சொல்.
மனித உறவுகள் பல்வேறு தேவைகளுக்காக உருவாகின்றன.
வியாபார தொடர்புகள் தொடக்கம் பாலியல் தொடர்புகள் வரை.

இந்த மனித உறவில் எதிர்ப்பாலரிடமும் சரி சமப்பாலரிடமும் சரி பாலியல் தொடர்பு ஏற்படுத்தல் எந்தவிததிலும் குறைவானதோ தவறானதோ அல்ல.

பாலியல் தொடர்புக்கான தேவை எழுகின்றவிடத்து அவ்வுறவு நிகழும்.

சும்மா பெயர்களை வைத்து யாவாரம் பண்ணுவது எரிச்சலை வரவழைக்கிறது.

நட்பாவது காதலாவது மண்ணாவது.

இந்த விவாதத்தையும் நட்பின் , உறவுகளின் புனிதத்தன்மையையும் போதித்து காப்பாற்றுபவர்கள் சுயநலவாதிகள்.

இந்த புனிதத்தை போதித்து சிந்திக்க முயலும் பெண்களை, அதிகார ஆண்வர்க்கம் பலகாலமாக ஏமாற்றி வருகிறது.

ஆண்-பெண் சமனிலை நிகழும் சமூகத்தில் இந்த விவாததுக்கு இடமில்லை.

No comments: