Wednesday, November 02, 2011

காலத்தின் கேடு

சோசியல் நெட்வர்க் என்று மக்கள் ஒட்டிக்கொண்டு டைம் வேஸ்ட் பண்றாங்க... இது  ஒரு மாயவலை.  காலத்தின் கேடு.  ராமன் ஒவ்வொரு நண்பரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தான்.

அவன் வேலை செய்யும் ஐ.டி. துறை அப்படி.

எங்கு பார்த்தாலும் மொபயிலிலோ அல்லது லேப்டாபிலோ ஏதாவது நெட்வர்க்கில் எதாவது தட்டச்சு செய்து தங்கள் உணர்வுகளை பதித்துக்கொண்டு இருப்பார்கள். சில பாவப்பட்ட ஜனங்கள், பெண் பெயரில் எழுதும் ஆண்களை நம்பி, வேலை செய்யாமல் அவர்கள் மேனேஜர்களிடம் ( டேமேஜர்கள் என்பார்கள் ) திட்டு வாங்கிக்கொண்டு லேட்டாக வேலையை முடிப்பார்கள்!

ராமன் அந்த கூட்டத்தை சேராமல், தன வேலை மட்டும் செய்துக்கொண்டு இருப்பவன்.  வெட்டுக்கு சென்றாலும் மனைவி, மகள் என்று நின்றுவிடும் அவன் உலகம். அவர்கள் இருவரை சுற்றியே அவன் வாழ்க்கை பாதை அமைந்தது. ஒன்பது வருடங்கள் ஆகியிருந்தது அவர்கள் திருமணம் நடந்து, சாட்சியாக எட்டு வயது மகள் வர்ஷினி... அதிகமாக பீஸ் வாங்கிக்கொண்டு அரைகுறையாக பாடம் நடத்தும் ஒரு ஆங்கில வழி பள்ளியில் மூன்றாம் வகுப்பில் இருந்தாள்.  

அவர்கள் வாழ்ந்தது மயிலாப்பூர் ஏரியாவில் ஒரு இரண்டு பெட்ரூம் அபார்ட்மென்ட். மனைவியின் கடவுள் பக்தி அதிகம் என்பதால், டைடல் பார்க் சென்று வர தூரம் அதிகமென்றாலும் கோவில்கள் இருக்கும் ஏரியாவில் வீடு தேடினான். அவர்கள் விருப்பம் மாதிரியே அளவான விலையில் அந்த வீடு கிடைத்தது. நல்ல நண்பர்களும், உதவும் மனப்பான்மையோடு இருக்கும் மனிதர்கள் இருக்கும் ஏரியா எனபதை அவன் அபார்ட்மென்ட் பறை சாற்றியது .

எப்போதாவது கோவையிலிருந்து சென்னைக்கு வரும் அவள் பெற்றோரே அவளுக்கு விருந்தினர்.  வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற விருப்பத்திற்கு மாறாக சென்னையிலே இருந்துவிட்டபடியால்,  பொள்ளாச்சியில் இருக்கும் அவன் பெற்றோர் அவன் வீட்டுக்கு அதிகம் வந்து செல்வதில்லை. "உனக்கு எதுக்குடா அவ்வளவு செலவு செஞ்சு படிக்க வச்சோம்? அமெரிக்காவிலே இருக்க வேண்டியது தானே? இங்கிருந்து என்னத்த கண்டே... " என்று நொந்துக்கொண்டார்கள்.  இதற்கும் அவன் தங்கைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து தான் அவன் செலவில் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

*****

ஒரு நாள் மதியம் அவனை அவன் மனைவி ஜானகி அவசரமாக அழைத்தாள்... "உடனே வாங்க, ஸ்கூலில் வர்ஷினி மயங்கி விழுந்திட்டா... நான் அவளை காலீஸ்வராலே  அட்மிட் பண்ணியிருக்கேன்.  ... "  விம்மினாள்.

கிடக்குறது வேலை என்று அவன் மேனேஜரிடம் சொல்லிவிட்டு, விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தான். ஒரே மகள். போதும் என்று பொத்தி பொத்தி வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆயிற்றே.

வர்ஷினி சோகமாக படுத்துக்கொண்டு இருந்தாள். பக்கத்தில் ஜானகி தேற்றிக்கொண்டு இருந்தாள்.

டாக்டர்கள் பல வித டெஸ்ட்கள் செய்தார்கள். அவன் கம்பெனி மெடிகல் இன்சூரன்ஸ் இருந்ததால் கவலை இல்லை. இருந்தாலும் குழந்தை நன்றாக வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான். 

வேலை பயம். போன் கால்கள் வந்த வண்ணம்  இருந்தன. அடிக்கடி சிறு ஈமெயில்கள் அனுப்ப வேண்டி இருந்தது....

டயபடிக்ஸ் ஆக இருக்கும் என்று சந்தேகித்தார்கள் டாக்டர்ஸ். பல வித டெஸ்ட் முடிவுகள் ஒன்றுமே தெளிவாக இல்லை.

"சரி அப்போல்லோ போய் ஒரு செகண்ட் ஒபினியன் எடுத்திடுவோம்... " வர்ஷினி மிகவும் மயக்கமான நிலையில் இருந்தாள்.  "இரு டாக்டரோடு பேசி பார்த்திடுவோம் ஜானு.. " அவன் குரல் கம்மியது.

அந்த மூன்று மாடி மிடில்க்லாஸ் ஆஸ்பத்திரியின் டாக்டர் ரூமை நோக்கி நடந்தான்.

டாக்டர் காமேஷ் அவனோடு பேசினார். 

"மிஸ்டர் ராமன், வர்ஷினிக்கு க்ளுகோஸ் லெவல் இறங்கவே இல்லே. கவலைப்படவேண்டாம்... நானும் இங்கிருக்கிறே  பல பெரிய ஆஸ்பிடல்ஸ்லே வேலை செய்யும் என் நண்பர்கள் மூலம், இந்த வித்தியாச காய்ச்சல் பற்றி விசாரிசிருக்கேன்... நாங்களும் முயற்சி பண்றோம்... மனசு தளராதீங்க... ப்ளீஸ். ".

ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை.  "டாக்டர் அப்படி என்ன புதுசா... உங்களுக்கு தெரியலைனா யாரை தான் கேட்பது?"  கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்தது அவனுக்கு.

அவன் தோல் மீது கை வைத்து டாக்டர் காமேஷ் தேற்றி விட்டு சென்றார்.

*****

விஷயம் கேள்விப்பட தங்கை சுமித்ரா அமெரிக்காவில் இருந்து தொலைபேசினாள். விவரம் எல்லாம் சொல்லிய அவன், யாராவது அங்கு வர்ஷினி கேசை பற்றி விசாரித்து விவரம் கொடுக்க முடியுமா என்று கேட்டான்...

"இமெயில் பண்றேன்".. என்றவாறு.. டாக்டர் ஆபிசை நோக்கி தந்தான். "டாக்டர் தங்கைக்கு விவரம் அனுப்பினால் எதாவது ஹெல்ப் அமெரிக்காவில் இருந்து கிடைக்கலாம்... "

"பெங்களூரில் டிஸ்டன்ட் மெடிகல் ஹிஸ்டரி டேடாபேஸ் வைத்து நடத்தும் என் இன்டர்நெட் கம்பெனி நண்பர் விஜயிடம் உங்கள் மகள் கேஸ் ஹிஸ்டரி, பேர் விவரம் இல்லாமல், அனானிமஸா போட சொல்லி கேட்டிருக்கேன். அதை பார்த்து யாரவது நிச்சயமா விவரம் கொடுப்பாங்க... இன்டர்நெட்டின் பலம் உங்களுக்கு தெரியாததா... "

" ஆமாம் டாக்டர். ட்ரை பண்ணுங்க. அந்த சைட் கேஸ் நம்பர் கொடுங்க. தங்கைக்கு அனுபுறேன். அவள் டாக்டர்ஸ் ப்ரெண்ட்ஸ் விசாரித்து சொல்றேன் என்று சொல்லியிருக்காங்க...". அழுகையாக வந்தது... 

ரூமிற்கு வந்த அவன்,  வர்ஷினிக்கு பக்கத்தில் ஜானகி மிகுந்த சோகத்தில் இருந்தாள் பார்த்து மேலும் கண் கலங்கினான். "சே என்ன வாழ்க்கையடா  இது... "... மனசு விம்மியது.

"ஜானு டாக்டர் டீடெயில்ஸ் கொடுத்திருக்கார். சுமித்ராவுக்கு அனுப்புறேன். ப்ரெண்ட்ஸ் கிட்டே கொடுக்கிறேன். யாரவது ட்ரீட்மென்ட் டீடெயில்ஸ்   கொடுப்பாங்க...  வர்ஷுக்கு ஒன்னும் ஆகாது.."

டாக்டர் காமேஷ் விவரம் கொடுத்ததை அவன் தங்கைக்கு மெயில் செய்தான். நெருங்கிய நண்பர்களிடமும் சொன்னான்.  "பயப்படாதே... ராமன் " என்று ஆறுதல் கூறினார்கள். " விவரம் கிடைத்தவுடன் நிச்சயம் அனுப்புறோம் ... " என்று அவன் மனதை தேற்றினார்கள்.
இரவெல்லாம் தூக்கமில்லை அவனுக்கு.  வர்ஷிணியும் காய்ச்சலால் விட்டு விட்டு எழுந்துக்கொண்டு இருந்தாள். 

அதிகாலை ஐந்து மணி அளவில், சுமித்ரா ட்ரென்டனில் இருந்து தொலைபேசினாள். "அண்ணா வர்ஷினிக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லே. கோகோ கேன்டியாசிஸ் அமீபையோசிஸ் வைரஸ் தான் தாக்கி இருக்கும் என்று சொல்றாங்க இங்கே ஒரு டாக்டர். ஈமெயிலே எல்லா விவரமும் அனுப்பி இருக்கேன். அதை டாக்டர் கிட்டே கொடுத்திடுங்க... கவலைப்படாதே.. "


 "தேங்க்ஸ் சுமித்ரா...  டாக்டர் என்ன சொல்றார்னு திருப்பி மெயில் பண்றேன்... "  ராமனுக்கு ஒரு வித மகிழ்ச்சி எண்ணம் வந்தது.

 ****

உடனடியாக டாக்டர் காமேஷ் அந்த இமெயில் விவரங்களையும், மற்ற டாக்டர்களோடு பேசி, உடனடியாக அந்த வைரசுக்கு தகுந்த ஆண்டிபயாடிக் கொடுக்க ஆரம்பித்தனர்.  சந்தேகங்களை, விவரம் கொடுத்த பீடியாட்ரிக் ஸ்பெசலிஸ்ட் மூலம் தீர்த்துக்கொண்டு ட்ரீட்மென்ட் நடந்தது.

போதி தருமராக வந்த அந்த இன்டர்நெட் டேடாபேசுக்கு மனதார நன்றி செலுத்தினான்.

மூன்று நாட்களில் வர்ஷினி பூரண நலன் அடைந்தாள். மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.

அவன் முகத்தில் இன்டர்நெட் நண்பர்கள் இப்படியாவது உதவினார்களே என்ற மிகுந்த சந்தோசம்.  

ஒரு வகையில் தண்டமாக காலத்தின் கேடாக வெட்டிப்பொழுது போக்கும் இன்டர்நெட் சாதனம், தன மகளுக்கு உதவியதில் அவனுக்கு பரம திருப்தி.

வளரும் நாடான இந்தியாவில் ஒரு பீடியாட்ரிக் ஸ்பெசலிஸ்ட் ஆஸ்பத்திரி இல்லாதது எவ்வளவு கொடுமை...

******


இந்த கதை வம்சி சிறுகதை போட்டிக்கு (2011) எழுதப்பட்டது.

வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!

1 comment:

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.