Monday, March 22, 2010

சாமியார்களை தேடி

By சுகி சிவம்
கடவுள் வேறு... மனிதன் வேறு என்று நினைப்பது வழிபாட்டில் ஆரம்ப நிலை. 
கடவுளும் நானும் வேறு வேறாக இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுதல் 
ஆத்ம நிலை. 
இந்தப் புரிதல் நிகழ்ந்தவர்களை 'ஸ்வாமி' என்று கொண்டாடுவது நமது பண்பு.

பகவான் ரமணர், ராமகிருஷ்ணர், சிவானந்தர், வள்ளலார், மணிவாசகர், 
நூற்றாண்டு கண்ட காஞ்சி மகா ஸ்வாமிகள் 
ஆகியோர் நமது மரியாதைக்குரிய முன்னோடிகள்.

இந்த உயர்நிலை தொடமுடியாத ஞானக் குட்டைகள், எந்த உழைப்பும் இன்றி வசதி, 
மரியாதை, சுகபோகங்களை அடைய சாமியார்களாக வேஷம் போட்டனர்.

ஜோதிடர், அருள்வாக்கு, தாயத்து, தகடு, மருத்துவம், ஏவல், பில்லி சூனியம், 
தனவசியம், ஆவி யுலகத் தொடர்பு என்று பலப்பல தலைகளுடன் பவனி வரும் 
ராவண சாமியார்கள்... மெலிந்து நலிந்த ஜனங்களாகிய ஜானகிகள் விழுந்து விழுந்து 
இவர்களை வணங்கும் விபரீதம்.. தன்னம்பிக் கையின் தலையில் இடி விழச் செய்து, 
முதுகெலும்பை முனை முறித்துப்போட்டு, 
மூச்சு விடுவதானாலும் சாமியைக் கேட்டுத்தான் விடவேண்டும் 
என்று பக்தர் களைப் பயமுறுத்தி வைத்திருக்கிற பயங்கரம்...

பலநூறு சாமியார்களோடு பழகிய நான் சொல்கிறேன்... 
இவர்களில் பலர் நம்மைப் போல சாதாரணமானவர்களே!
நம்மைப் போல் ஆசாபாசங்கள் உள்ள சராசரிகள். 
சிலசமயம் நம்மைவிட ஆசாபாசம்மிக்கவர்கள்!

தன் சங்கீதத்தால் ஜனங்களை வைகுந்தம் கூட்டிச் செல்லவல்ல 
ஒரு சாமியாரின் காலை நேரப் பணி - ஆர்வமாக ப்ளூ ஃபிலிம் பார்ப்பது!

சென்னையில் பிரமாண்டமான ஆசிரமம் வைத்திருந்த சாமியாரின் 
பெரிய சட்டைப் பாக்கெட்டுக்குள் பல எம்.பி-க்கள் குடியிருந்தார்கள்.
விரல் அசைத்தால் விபூதியும் குங்குமமும் வரவழைக்கும் விற்பன்னர்களைப் 
பற்றிப் பேசிப் பேசி மாய்ந்துபோகிற என் அருமை நண்பர்களே.. 
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி! சகலத்தையும் சிருஷ்டிக்கவல்ல நமது சாமியார்கள், 
கட்டடங்கள் கட்டும்போது காசு கேட்டு உங்களிடம் கையேந்துவது ஏன்? 
விபூதியும் குங்குமமும் வரவழைப்பதற்குப் பதில் சிமென்ட் டும் செங்கல்லும் 
வரவழைக்க வேண்டியதுதானே?

மந்திரத்தில் மாங்காய் வரவழைத்து, தெருவில் வித்தை காட்டிவிட்டு, 
சாப்பாட்டுக்கு நம்மிடம் கையேந்தும் கண்கட்டி வித்தைக்காரனுக்கும் 
இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் பயந்து பயந்து பிச்சை கேட்பார்கள்; 
இவர்கள் பயமுறுத்திப் பிச்சை கேட்கிறார்கள்.

''மந்திரங்களை முறையாக ஜெபித்தால் சித்திகள் தாமே வரும். ஆனால், 
இதனால் எந்தப் பயனும் இல்லை. முக்திக்கு இவை தடை! 
உணவு சாப்பிட்டால் மலம் உண்டாகும். யாராவது மலம் உண் டாகவேண்டும் 
என்று உணவு கொள்வார்களா? அப்படித்தான்... 
இறை வழிபாட்டால் சித்திகள் உண்டாகும். ஆனால், 
யாராவது சித்திகளுக்காக வழிபாடு செய் வார்களா?'' என்றார் பகவான் ராமகிருஷ்ணர்.

நாம் நமது சுயநலத்தால், பேராசையால், பலவீனத்தால், 
போலிச் சாமியார்களின் காலில் கிடக்கி றோம். மதத்தின் நன்மை கருதியும், 
மனிதனின் நன்மை கருதியும் இந்த விஷயத்தில் மறுபரிசீலனை மிக மிக அவசியம் 
என்று பணிவோடு, ஆனால் உறுதியோடும் திடமான பக்தியோடும் சொல்கிறேன்.

இந்த அவலங்கள் கடல் கடந்தும் நடக்கின்றன. 
சிங்கப்பூரில் ஒரு குருக்களை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்கள். ஏன் தெரியுமா? 
பெண் பக்தர்களுக்கு அவர் மந் திரித்துக் கயிறு கட்டிவிடுவார். 
இதில் என்ன தப்பு? பெண்கள் இடுப்பில் அவரே கட்டிவிடுவார். 
இதுதான் திரிசமம்! இவர்கள் குருமார்களா... குரூரமானவர் களா? யோசியுங்கள்.

தன்னைப் பார்க்க வந்த திரு மணமான பெண்ணை உற்றுப் பார்த்த 
காமச் சாமியார், ''ஆஹா.. நீ என் போன ஜென்மத்து மனைவி அல்லவா! 
இந்த ஜென்மத்திலும் நீ என்னுடன் இருக்கக்கடவாய்'' என்று திருவாய் மலர்ந்தார்.
உறவும் பிறப்பும் அர்த்தம் அற்றது என்று இந்த ஜென்மத்து உறவு களையே 
உதறவேண்டிய ஞானி கள் போன ஜென்மத்து உறவைப் புதுப்பித்துக்கொள்வது 
நியாயம் தானா?

புகழ் அடைவதற்குரிய எந்தவிதமான தகுதிகளும் அற்ற இயலாமை மிக்க பலர் கடவுளோடு
தங்களைத் தொடர்புபடுத்தி பிற ரிடமிருந்து தங்களை உயர்ந்தவ ராகக் காட்டிக்கொள்ளும் 
மன நோய் உள்ளவர்கள் என்று சைக் கியாட்ரிஸ்டுகள் கூறுகிறார்கள். 
இத்தகைய மனச்சிதைவுடைய மன நோயாளிகளே சாமியார்களாகத் 
தங்களைப் பிரகடனப்படுத்துகிறார்கள். வக்கிர மனம் படைத்த சில சாமியார்களும் உண்டு.

உண்மையில் நல்ல துறவிகள், மக்கள் தங்களைத் தேடி வருவதைத் தவிர்ப்பார்கள். 
தமது சக்திகளை வெளிப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் விரும்பமாட்டார் கள். 
தங்களைப் பிறர் வணங்கு வதைக்கூடத் தவிர்த்துவிடுவார் கள். 
அப்படிப்பட்டவர்களைத் தேடினாலும் அகப்படமாட்டார் கள். 
அவர்கள் அடிமலர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்!

பணம் கொடுக்கிற சாமியார்களை மீடியாதான் பெரிதுபடுத்திவிட்டது. 
கவுண்டமணி - செந்தில் மாதிரி (அவர்கள் சிறந்த கலைஞர் கள். 
என்னை அவர்கள் மன்னிக் கட்டும்) 
அடித்துக்கொள்கிற சாமி யார்களின் சண்டைகளால் தங்களுக்குப் புகழ் சேரும் என்று 
இந்த மதத்தின் கௌரவத்தைப் பலர் காற்றில் விட்டுவிட்டார்கள். 
இவர்களை வழிகாட்டிகளாகக் கருதி, 
ஏமாந்து போகாதீர்கள்.

இவர்கள் போலியாக அன்பு காட்டுவார்கள். 
உங்கள் பிரச்னை யைத் தீர்ப்பேன் என்பார்கள். 
கணவன்-மனைவியைக்கூடப் பிரித்து வைப்பார்கள். 
பணம் பெரிய விஷயமல்ல என்பதுபோல் உபதேசங்கள் செய்து உங்கள் பணத்தை, 
உழைப்பை, நேரத்தை உறிஞ்சிவிடுவார்கள். 
உள்ளத்தை ஊனமாக்குவார்கள். தம்மை விட்டு விலகினால் கேடு வரும் 
என்று மிரட்டுவார்கள். 
பயப்படாமல் கடவுள் பெயரைச் சொல்லி வெளியே வாருங்கள்.

பெண்ணின் திருமணம், மகனுடைய வேலை வாய்ப்பு, பணக் கஷ்டம், 
தீராத நோய்கள்.. இவை உலகத்தின் பொதுப்பிரச்னைகள். 
இதைக் கடவுளிடம் பேசிக்கொள் ளலாம். கதவுகளை விரியத் திறந்து வைத்திருக்கும்
கடவுளை நம்பாது அறைக்கதவை அடைத்து வைத் துக்கொள்ளும் அரைகுறை சாமி
களை நம்புவதா? ஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் காலையும் மாலையும் 
பலமுறை படியுங்கள்.. 
கோளும் நாளும் உதவிகள் செய்யும்; 
உங்கள் துயரங்கள் தீரும். சத்தியம்!
 
- ஆனந்த விகடன் பொக்கிஷத்தில் வந்ததை ( 19 வருடம் முன் )- நண்பர் அனுப்பினார்! 

No comments: